கந்துவட்டி கொடுமை புதிய தலைமுறை
இந்தியா

கர்நாடகா : கந்துவட்டி தரவில்லை எனக் கூறி இளைஞர் மீது ஆசிட் வீச்சு!

கர்நாடகாவில் கந்துவட்டி பணம் தரவில்லை எனக் கூறி, இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ம.ஜெகன்நாத் 

கர்நாடக மாநிலம், கல்புருகி பகுதியைச் சேர்ந்தவர் ஜூபேர் அஹமத். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அர்ஷாத் பர்வேஜ் என்ற நபரிடம் சுமார் 35 லட்சம் ரூபாய் கடனாகப் பணம் பெற்றுள்ளார் இவர். இதற்கு வட்டி, மீட்டர் வட்டி என போட்டு 90 லட்சம் பணம் தரும்படி அர்ஷாத் மற்றும் அவருடைய நண்பர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜுபேர் அஹமத்

இந்தநிலையில் ஜூபேர் அஹமத் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அர்ஷாத்தின் கூட்டாளியான இம்ரான் கான், ஜூபேரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த இம்ரான் கான், மறைந்து வைத்திருந்த ஆசிடை எடுத்து ஜுபேர் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காயமடைந்த, ஜுபேர் அஹமத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இம்ரான் கானை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்றவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.