தாய்க்கு மருந்து வாங்க முடியாமல் தவித்த கர்நாடக பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு முதல்வர் எடியூரப்பாவின் உதவியை நாடிய சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவது குறித்து பலரும் எதிர்மறையான நம்பிக்கையையே கொண்டுள்ளனர். ஆனால் அந்த டிக்டாக் வீடியோ அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு பெண்ணின் உயிர்க்காக்கும் உபகரணமாக உதவி இருக்கிறது. இந்த வீடியோவின் மூலம் ஒரு தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணர்வுப்பூர்வமான நிகழ்வு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு 18 வயது ஆகிறது. இவரது தாயார் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்து வந்துள்ளார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்துள்ளது. அதனையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அதன்படி அவர் தினமும் நான்கு விதமான மாத்திரைகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரால் வாழ்வது சிரமம்.
அதனடிப்படையில் அவர் தினமும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு அவருக்குத் தேவையான மாத்திரைகள் வாங்குவதில் தட்டுப்பாடு நிலவியுள்ளது. ஆகவே வழி அறியாமல் தவித்த பவித்ரா டிக்டாக் மூலம் ஒரு வீடியோவை தயாரித்து முதல்வரை உதவும் படி கோரியுள்ளார். அந்த வீடியோ சில மணிநேரங்களில் வைரலாக பரவியது. அடுத்த சில மணிநேரங்களில் கர்நாடக மாநில முதல்வர் பார்வைக்குச் சென்றதாகத் தெரிகிறது. அதன்படி அவருக்கு உதவ உத்தரவிட்டுள்ளார் முதல்வர். அதன் பேரில் அதிகாரிகள் நேற்று இரவு 11 மணிக்கு அவரிடம் மருந்தை ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பவித்ரா, “ஒரு வருடத்திற்கு முன்பு எனது தாயின் சிறுநீரகங்கள் செயலிழந்தன. மருத்துவர்கள் டயாலிசிஸை பரிந்துரைத்தனர். அதற்கு ஒரு வருடம் கழித்து, என் அம்மா மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் உயிர்வாழ மாட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, என் அம்மாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்றிலிருந்து, மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் எடுக்க வேண்டிய நான்கு மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நாங்கள் மாத்திரை வாங்க வெளியே போனோம். எங்களால் பெங்களூரிலிருந்து அதைப் பெற முடியவில்லை”என்று 'நியூஸ் மினிட்’ செய்தி தளத்திற்குப் பேசியுள்ளார் பவித்ரா அரபவி. மேலும் அவர் பெலகாவி அல்லது ராம்துர்க்கில் மருந்துகள் கிடைக்காததால் பெங்களூரிலிருந்து மருந்துகளை ஆர்டர் செய்து கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.. மருந்துகள் வாங்க மாதத்திற்கு ரூ.20,000 செலவாகும் என்று அவர் கூறியுள்ளார்.