இந்தியா

கர்நாடகா மாணவியை அல்-கொய்தா பாராட்டிய விவகாரம் - விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

கர்நாடகா மாணவியை அல்-கொய்தா பாராட்டிய விவகாரம் - விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாணவியை அல் - கொய்தா தலைவர் பாராட்டிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக ஒருதரப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், சிறிது நாட்களிலேயே இந்தப் போராட்டம் கர்நாடாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளுக்கு பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக, அங்குள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை சுற்றி நின்று சில மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக அந்த மாணவி 'அல்லா ஹு அக்பர்' என கோஷமிட்டார். இந்தக் காட்சி அப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனிடையே, அந்த மாணவிக்கு அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அய்மன் அல் ஜவாஹிரி சில தினங்களுக்கு முன்பு பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், ஹிஜாப் பிரச்னையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். கர்நாடகா மாணவியை அல் - கொய்தா தலைவர் பாராட்டியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அல் - கொய்தா இந்தியாவில் எங்கும் செயல்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்த வீடியோவை அவர்கள் வேறு எங்கிருந்தோ அனுப்பி இருக்கிறார்கள். கர்நாடகா மாணவிக்கு அந்த இயக்கத்தின் தலைவர் பாராட்டு தெரிவித்திருப்பதை தீவிரமாக கவனத்தில் எடுத்திருக்கிறோம். ஒருவேளை, இந்தியாவில் இருந்து கூட அல் - கொய்தாவை யாரேனும் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இதுதொடர்பாக இந்திய உளவு அமைப்பான ஐ.பி.யும், கர்நாடகா காவல்துறையும் தீவிரமாக விசாரித்து வருகின்றன" என அவர் கூறினார்.