கோலார் தங்கசுரங்கம் கூகுள்
இந்தியா

மீண்டும் ’KGF’ தங்கச் சுரங்கத்தை திறக்க அனுமதி! ’1804 - 2024’.. மிரட்டும் இரு நூற்றாண்டு வரலாறு!

Jayashree A

கர்நாடகாவின் ராபர்ட்சன்பேட்டை யில் அமைந்துள்ள KGF சுரங்கத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கர்நாடக அரசு.

கோலார் தங்கசுரங்கத்தைப் பற்றிய அலசல்

1804ல் ஆங்கிலேயரான மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லெவெல்லி என்பவர், ஏசியாடிக் ஜர்னலில் வெளியான கட்டுரை ஒன்றை படித்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலம் கோலார் கிராமத்தில் தங்க சுரங்கம் உள்ளது என்பதை அக்கட்டுரை விவரித்துள்ளது. அதைப்படித்தவுடன், 1871ல் இந்தியாவில் அதுவும் பெங்களூரில் வந்து தங்கிவிட்டார் மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட். அச்சமயம் பெங்களூர் ஆங்கிலேயர் வசம் இருந்தது இவருக்கு சுலபமாக இருந்தது.

பெங்களூரில் வந்து தங்கிய இவர் மெதுமெதுவாக கோலார் பகுதியில் தங்கசுரங்கத்தை தேடும் பணியினை செய்து வந்தார். அப்பொழுது ஆங்கில தளபதியான வாரனுக்கு, இவர் மூலமாக கோலார் பகுதியில் தங்கசுரங்கம் இருக்கும் செய்தி எட்டியது. வாரன் முயற்சியில் மண்ணிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்தனர். டன்கணக்கான மண்ணில் கிராம் கணக்கான தங்கம்தான் அவர்களுக்கு கிடைத்தது. இருப்பினும் வாரனுக்கு ஆசை விடவில்லை, தொழில்நுட்பங்களின் உதவியால் அதிகப்படியான தங்கத்தை மண்ணிலிருந்து பிரித்து எடுக்கமுடியும் என்று கருதினார்.

அதன்படி 1804 மற்றும் 1860 க்கு இடையில், இந்த பகுதியில் நிறைய ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடந்தன. ஆனால் ஆங்கிலேய அரசுக்கு அதிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஆராய்ச்சியால் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்பதோடு கூடவே பலர் தங்கள் உயிரையும் இழந்தனர். அதன் பிறகு அங்கு அகழ்வாராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் 1871 இல், வாரனுக்கு பிறகு, லெவெல்லியின் மனதில் கோலார் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. அதனால் கோலாரில் தங்கி ஆராய்ச்சி செய்தவர் அங்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். அவ்விடம் மைசூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, இருப்பினும், லெவெல்லி அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று மைசூர் மகாராஜாவிடம் அனுமதி கேட்டார்.

மைசூர் மகாராஜாவும் லெவெல்லி கோலார் பகுதியில் 20 ஆண்டுகள் வரை தோண்டுவதற்கான உரிமம் கொடுத்தார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு அந்த இடத்தில் வேலை தொடங்கியது. அங்கு மின்சாரத்தை பயன்படுத்தி விளக்குகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் மின்சாரம் பெற்ற முதல் நகரமாக கோலார் ஆனது.

மின்சாரம் வந்த பிறகு, KGF இல் அகழ்வு வேகத்தை அதிகரிக்க விளக்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வேலை ஆரம்பித்தது. அப்பகுதியில் ஆங்கிலேய அரசின் அதிகாரிகளும் பொறியாளர்களும் அங்கேயே வீடுகளை கட்டத் தொடங்கினர். அதன்பிறகு அங்கு பல குடியிறுப்புகள் வந்ததை அடுத்து அவ்விடம் கேஜிஎஃப்,' லிட்டில் இங்கிலாண்ட்' என்று அழைக்கப்பட்டது. , 1902 வாக்கில், கேஜிஎஃப் மொத்த தங்க உற்பத்தில் உலகில் ஆறாவது இடத்தை பிடித்தது.

நாடு சுதந்திரம் அடைந்ததும் இந்த இடத்தை இந்திய அரசு தன் வசம் எடுத்துக் கொண்டது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 1956 இல் இந்த சுரங்கம் தேசியமயமாக்கப்பட்டது.

1970 இல் இந்திய அரசின் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. ஆரம்ப வெற்றிக்குப் பிறகு நிறுவனத்தின் லாபம் நாளுக்கு நாள் குறைந்தது. 1979க்குப் பிறகு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாத நிலை ஏற்பட்டு தொழிளார்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து நட்டம் ஏற்பட்ட நிலையில் 2001-ம் ஆண்டு பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அங்கு தங்கம் எடுப்பதை நிறுத்தியது. அதன் பிறகு அந்த இடம் பாழடைந்து போனது.

2001-ல் மூடப்பட்ட நிறுவனம் மீண்டும் 2024ல் திறப்பதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 125 ஆண்டுகளில் அப்பகுதியிலிருந்து 900 டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் , 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோலார் தங்கசுரங்கத்திலிருந்து தங்கத்தை பிரித்து எடுக்க நினைத்திருந்த மத்திய அரசுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுவரை பாரத்கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தோண்டிய மண்ணில் இருந்து மீண்டும் தங்கத்தை பிரிக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார். இந்த சுரங்கங்களில் 3.3 கோடி டன் மண் உள்ளது என்றும் இதை சயனைடு சேர்த்து தங்கம் எடுக்கலாம் என்றும் கூறினார். ஒரு டன் மண்ணில் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் அரசுக்கு செலுத்தவேண்டிய ரூ.734 கோடிக்கு பதிலாக, செயலிழந்த கோல்ட் மௌன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2330 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து அங்கு தொழில் பூங்கா அமைக்க கர்நாடக அரசு அனுமதி கோரியுள்ளது.

திட்டமிட்டபடி இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால், உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.