கர்நாடகா மாநிலத் தலைநகரம் பெங்களூருவின் அரசியல் பின்னணி குறித்தும்.. அரசியல் நிலவரம் குறித்தும் பார்க்கலாம்.
கர்நாடகாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரு முற்றிலும் வித்தியாசமானது. பல மொழி, பல சமூக மக்கள் வாழும் காஸ்மோபாலிடன் பகுதி என்பதுதான் இதற்குக் காரணம். மாநிலத்தின் மற்ற பகுதி மக்களின் பிரச்னைகளைவிட பெங்களூவின் பிரச்னைகள் மாறுபட்டவை. போக்குவரத்து நெரிசல், சுகாதாரம், குடிநீர் பிரச்னை, குற்றங்கள், கடுமையான விலைவாசி என இங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறாத காட்சிகள் என்பதே பெங்களூருவாசிகளின் புலம்பல்.
பெங்களூரு நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள ராமநகரா மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியில் மொத்தம் 36 தொகுதிகள் உள்ளன.
* 2008 பேரவைத் தேர்தலில், பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வென்றன. மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களைக் கைப்பற்றியது.
* 2013 தேர்தலில் பாஜக 12 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 7 இடங்களையும் வென்றிருந்தன.
* கடைசியாக 2018-இல் நடைபெற்ற தேர்தலில், பாஜக மாநிலத்தின் பிற பகுதிகளில் அதிக இடங்களை வென்றபோதும், தலைநகரில் 11 இடங்களையே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 18 இடங்களை கைப்பற்றியிருந்தது. மதசார்பற்ற ஜன தாதளம் 7 இடத்தை வென்றிருந்தது.
கடைசியாக நடந்த 3 தேர்தல்களிலும், பாஜகவைவிட காங்கிரஸ் அதிக சதவீத வாக்குகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவரான DK சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி போட்டியிடும் தொகுதிகள் பெங்களூரு பகுதியில்தான் உள்ளன.
இந்நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும், ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும் முழுவீச்சில் களம் கண்டுள்ளன. பெங்களூருவை, தலைநகர பிராந்தியமாக அறிவித்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளதுபோல் போக்குவரத்து முறையை ஏற்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது பாஜக. மறுபுறம் காங்கிரஸும் பெங்களூருவுக்கென பிரத்யேக வாக்குறுதிகளுடன் மக்களை சந்தித்துவருகிறது.