நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பாஜக, மஜத தலைவர்களை சபாநாயகர் சந்தித்தார்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி, தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார். ஆனால் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு நாட்கள் நடந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனிடையே இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கர்நாடகா சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இன்று காலை முதலே விவாதம் மட்டுமே நடைபெற்று வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றைக்குள் நடத்த வேண்டுமென்று சபாநாயகரை சந்தித்து பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, மாலை 6 மணியளவில் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரம் அவை கூடவில்லை. அந்த நேரத்தில் முதலில் பாஜக தலைவர்களுடன் சபாநாயகர் ரமேஷ் குமார் சந்தித்தார். அவர்களை தொடர்ந்து, மஜத தலைவர்களையும் சபாநாயகர் சந்தித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றைக்குள் நடத்த வேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.