செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ரேவண்ணா (66). இவரது வீட்டில் பணியாற்றிய 47 வயது பெண், ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஹொளேநரசிபுரா காவல் நிலையத்தில், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், தந்தை, மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிரஜ்வல் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், மைசூர் கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் வேலைக்காரப் பெண்ணை கடத்திய பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹொளேநரசிபுரா காவல் நிலையத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும், பெங்களூரு 42வது சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெ.ப்ரீத் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, எந்த காரணத்துக்காகவும் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அசோக் நாயக், ஜெய்னா கோட்டாரி வாதாடினர். ஆனால், பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டி ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ப்ரீத், ரேவண்ணாவுக்கு, ஒருவர் உத்தரவாதத்துடன், 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் உட்பட சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு, மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதற்காக, மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.