கர்நாடகாவில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக நாடகம் நடத்திய பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவின் பிடர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த நாடகத்தில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மாணவர்களை வைத்து அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த நாடகம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றினை பத்திரிகையாளர் முகமது யூசப் ரஹீம் என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வந்துள்ளது. அந்த வீடியோவில், ‘அரசு முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது. அது, நம்முடைய பெற்றோர் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆவணங்களை கேட்கிறது. அப்படி நம்மால் ஆவணங்களை கொடுக்க முடியவில்லை என்றால், நாட்டைவிட்டு வெளியேற சொல்கிறது’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, பள்ளியில் நடத்தப்பட்ட நாடகத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஃப்.ஐ.ஆர்-ல் வீடியோவை பதிவிட்ட பத்திரிகையாளர் பெயரும் இடம்பெற்றுள்ளது.