இந்தியா

அரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை

அரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை

webteam

கர்நாடகா, சிக்கமங்களூர் மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு 7 வருடங்களாக சிறந்த சேவை செய்து வந்த டைசி என்ற நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏழரை வயதுடைய பெண் டாபர்மேன் நாய்  ‘டைசி’ கடந்த 7 வருடங்களாக சிக்கமங்களூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தது. 

சிறந்த மோப்ப சக்தியுடைய  ‘டைசி’ இதுவரை 105 குற்றம் நடக்க இருந்த இடங்களையும் 8 கொலை சம்பவங்கள் குறித்த குற்றவாளிகளையும், 15 வீட்டின் கொள்ளை சம்பவங்களையும் மற்றும் மற்றவகையில் 20 வழக்குகளையும் கண்டுபிடிக்க உதவியுள்ளது. 

இதையடுத்து சில மாதங்களாக அந்த நாய் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அந்த நாய் திடீரென திங்கள்கிழமை உயிரிழந்தது. 

இதைத்தொடர்ந்து சிக்கமங்களூர் போலீசார் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க டைசி நாயை அடக்கம் செய்தனர். 

இதுகுறித்து சிக்கமங்களூர் எஸ்பி ஹரிஷ் பாண்டே கூறுகையில்,“டைசி நாய் எங்கள் துறைக்கும் மிகவும் உதவியாக இருந்தது. சில நாட்களாக கேன்சர் நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அதனால் முன்பு போல் செயல்படமுடியவில்லை. கேன்சர் நோயால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருக்கும்” என கூறினார்.