Ramar Kovil pt desk
இந்தியா

கர்நாடகத்தில் உள்ள ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் - மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

கர்நாடகாவில் மார்ச் 21 ஆம் தேதிக்குள் ராமர் கோயிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக இந்தியில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த ஒன்றாம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Letter

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பேலகாவி மாவட்டம் நிபானியா பகுதியில் உள்ள ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக, இந்தியில் கோவிலுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

101 ஆண்டுகள் பழமையான ராமர் கோவில் மார்ச் 21 ஆம் தேதிக்குள் குண்டு வைத்து தகற்றப்படும் என்றும் “குண்டுவெடிப்பை முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CCTV

இரண்டு கடிதங்கள் வேறு வேறு தினங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதல் கடிதம் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி ராமர் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட கடிதம் ராமர் கோவிலுக்கு எதிரே உள்ள ஹனுமான் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை கோயில் பூஜாரி சுரேஷ் சிவாஜி தேசபாண்டே முதலில் பார்த்து, கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் நிப்பானியா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கோவில் பகுதியில் 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயத்தில், சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் யாரேனும் வேண்டுமென்றே செய்த செயலா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.