செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புராவை சேர்ந்தவர்கள் அமீர் உசேன் - ஹசீனா பானு தம்பதியர். இவர்கள் இருவரும் காபி தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள். இவர்களது ஆறாவது மகன் உபைதுல்லா (11). மிகவும் குறும்புத்தனத்துடன் அதிகம் கோபப்படுபவராகவும் இருந்துள்ளார்.
இதனால் இவரை கட்டுப்படுத்த இடுப்பில் இரும்பு சங்கிலி கட்டி, அதை காலுடன் இணைத்து வீட்டில் பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், காலையில் வேலைக்குச் செல்லும் பெற்றோர், மதியம் வீட்டுக்கு வந்து மகனுக்கு உணவளித்த பின், மீண்டும் பணிக்கு சென்றுவிடுவர். எப்படியோ அங்கிருந்து தப்பிய சிறுவன், சாலையோரத்தில் அமர்ந்திருந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.