சித்தராமையா, மாரி கவுடா எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா | மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா.. காரணம் என்ன?

மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Prakash J

கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் லே-அவுட்டில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு அதிகாரிகளுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக அரசியலில் புயலை வீசியுள்ள இந்தச் சம்பவத்தில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, நில முறைகேடு விவகாரம் தொடர்பாக, சித்தராமையாவின் மனைவி பார்வதி, மூடா அமைப்பிற்கு எழுதிய கடிதத்தில், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பி தருவதாகத் தெரிவித்திருந்தார்.

சித்தராமையா

இந்த நிலையில், மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை, ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். மாரி கவுடா ராஜினாமா குறித்து சித்தராமையா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. 1983 முதல் மாரி கவுடா சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு பதவிகள் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாரி கவுடா உடல் சோர்வு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர், சிறப்பு சிகிச்சைக்காக மைசூருக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: உ.பி.| சமையல் பாத்திரத்தில் சிறுநீர்.. உணவில் கலப்பா? கேமரா வைத்த முதலாளி.. வசமாக சிக்கிய பணிப்பெண்!