ஒருபுறம் அறிவியல் வளர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமையாக இருந்தாலும் மறுபுறம் கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் அதே வேகத்துடன் வளர்ந்துவருகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக கர்நாடக மாநிலத்தில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்...
கர்நாடக மாநிலம் புத்தூரை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று 30 வருடங்களுக்கு முன் இறந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் குடும்பத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனிடையில் அக்குடும்பம் சில பிரச்னைகளையும் சந்தித்துள்ளது.
பிரச்னைகளிலிருந்து விடுபட அக்குடும்பத்தாரிடம் சிலர், “உங்கள் வீட்டில் 30 வருடத்திற்கு முன் இறந்த குழந்தைக்கு தற்போது திருமணம் செய்து வைத்தால் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும்” என்று கூறியுள்ளனர். நம்பிக்கையின்பேரில் அந்த குடும்பத்தினர், செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்று கொடுத்துள்ளனர். அதில் இறந்த தங்கள் மகளுக்கு, தங்கள் ‘சமூகத்திலேயே’ (சாதியிலேயே) 30 வருடங்களுக்கு முன்பு இறந்த மணமகன் தேவை என்ற விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை பார்த்த சிலர், மணமகள் வீட்டாரை தொடர்பு கொண்டுள்ளனர். அதில் ஒரு குடும்பத்தை தேர்வு செய்து, அவர்களுடன் பேசி, இல்லாத ஆணிற்கும் இல்லாத பெண்ணிற்கும் முறைப்படி பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, திருமாங்கல்யம், பழம், பூ என்று திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்கி இரு வீட்டாரும், சொந்தபந்தங்களும் ஒன்றாக இணைந்து இறந்தவர்களை நினைவுகூர்ந்து வழிபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதே போல் தமிழ்நாட்டிலும் சிவகங்கை பகுதியில் சிறு வயதில் இறந்த ஒரு பெண்குழந்தைக்கு கடந்தவாரம் மஞ்சள் நீராட்டு விழா நடத்திய சம்பவம் நடந்தது. அதுவும் தற்போது வைரலாகி வருகிறது. அதுதொடர்பான செய்தியை, கீழ்க்காணும் வீடியோவில் அறியலாம்...