கர்நாடகா மசூதி முன்பு அனுமன் மந்திரத்தை ஒலிக்கவிட போவதாக விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அறிவித்ததை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் ஜாமியா மஸ்ஜித் மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த மசூதியானது அனுமன் கோயிலை இடித்து கட்டப்பட்டிருப்பதாக அண்மைக்காலமாக விஹெச்பி அமைப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட மசூதியில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு மசூதி நிர்வாகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருிகறது.
இந்த சூழலில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜாமியா மஸ்ஜித் மசூதி முன்பு இன்று அனுமன் மந்திரத்தை இன்று ஒலிக்கவிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விஹெச்பி அமைப்பினர் நேற்று அறிவித்தனர்.
இதையடுத்து, அசம்பாவிதத்தை தவிர்க்கும் விதமாக அந்த மசூதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நாளை மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மாண்டியா மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.