இந்தியா

கர்நாடகா: மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

கர்நாடகா: மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

Sinekadhara

கர்நாடகாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய நபர்மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.

கர்நாடகாவிலுள்ள கல்புராகி சூப்பர் மார்க்கெட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு ட்ரவுசர் மற்றும் கருப்பு பனியன் அணிந்திருந்த ஒரு நபர் பிஸியான மார்க்கெட்டின் நடுவே நின்றுகொண்டு கத்தியை காட்டி அங்கு இருந்த பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அங்குசென்ற போலீசார் தப்பிக்காதவண்ணம் அந்த நபரை சுற்றிவளைத்தனர்.

அதனைப் பார்க்க அங்கிருந்த பொதுமக்களும் குழுமியுள்ளனர். கத்தியை காட்டி மிரட்டிய அந்த நபரின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சுருண்டு கீழே விழுகிறார். உடனே அவர்மீது தடியடி நடத்தி காலால் உதைக்கின்றனர் போலீசார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கல்புராகி போலீஸ் கமிஷ்னர் சேத்தன் ஆர். கூறுகையில், ”அடையாளம் தெரியாத ஒரு நபர் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடுவில் நின்றுகொண்டு கத்தியைக் காட்டி மிரட்டினார். போலீசார் அவரை தடுத்து பிடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த நபர் போலீசையும் தாக்கியதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது” என்று கூறியுள்ளார். மேலும் அந்த நபரின் பெயர் ஜாஃபெர் எனவும், கைது செய்யப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.