இந்தியா

இறுதிச் சடங்கில் வெளிப்பட்ட மதங்களைக் கடந்த மனிதநேயம்  

இறுதிச் சடங்கில் வெளிப்பட்ட மதங்களைக் கடந்த மனிதநேயம்  

webteam
இறுதிச் சடங்கு செய்வதற்காக உறவினர்கள் வர முடியாமல் தவித்த போது மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் மாற்று மதத்தினர் உதவியுள்ளனர். 
 
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ளது தும்கூர். கொரோனா தொற்றுக் காரணமாக  இந்தப் பகுதி இரண்டு வாரங்களுக்குக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொது நடமாட்டம் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பகுதிக்குட்பட்ட  கே.பி.எச் காலனியில் எச்.எஸ். நாராயண் ராவ்  என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 60 வயதாகிறது. இதனிடையே  திடீரென்று இவர் காலமானார். தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அவரது உறவினர்கள் யாரும் வர முடியாத சூழல் ஏற்பட்டது. 
 
 
இந்நிலையில் அவரது உறவினர்கள் வரமுடியாதபோது, அவரது மனைவியும் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சுமார் 10 இளைஞர்கள் நாராயணின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்துள்ளனர்.  இந்தப் பகுதியில் அதிகமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவராக நாராயண இருந்தாலும் எந்தவித மதப் பாகுபாடும் பார்க்காமல் இஸ்லாமியச் சமூகத்தினர் இந்தக் குடும்பத்திற்கு உதவிய நிகழ்வு பலரையும் மனம் நெகிழச் செய்துள்ளது. 
 
 
இது குறித்து இந்தப் பகுதியில் வசித்து வரும் காலித், “நாங்கள் உள்ளூர் கார்ப்பரேட்டர்  நயாஸ் அகமதுக்கு போன் செய்தோம்.  அவர் சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே வசித்து வருகிறார். அவர் சடலத்தைத் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸைஅனுப்பினார்” என்று கூறியுள்ளார்.