கர்நாடகா மக்களவை தேர்தல் புதிய தலைமுறை
இந்தியா

கர்நாடகா மாநிலம் | மக்களவை தேர்தல் களம் எப்படி உள்ளது?

கர்நாடக மாநிலம் ஓராண்டு இடைவெளியில் 2ஆவது தேர்தலை எதிர்கொண்டுள்ளது. அம்மாநில தேர்தல் களம் குறித்த ஒரு பார்வை.

PT WEB

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதிக தொகுதிகள் கொண்ட மாநிலங்கள் வரிசையில் 8ஆவது இடத்தில் கர்நாடகா உள்ளது. இம்முறை இங்கு இரு முனைப்போட்டியாக தேர்தல் களம் அமைந்துள்ளது. இங்கு பாஜக இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக 25 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

மாநிலத்தில் ஆளுங்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் அனைத்து 28 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கடந்தாண்டு நடந்த கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

பாஜக 66 இடங்களை மட்டுமே வென்றது. பேரவைத்தேர்தல் முடிந்து 11 மாதங்களிலேயே மக்களவைத் தேர்தல் நடை பெறுவதால் மக்கள் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மையப்படுத்தியும் மோடி ஆட்சியை விமர்சித்தும் காங்கிரஸ் பரப்புரை அமைந்தது.

நாட்டின் வளர்ச்சி, மாநில அரசு மீது நிர்வாகச்சீர்கேடு புகார்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து பாஜக பரப்புரை மேற்கொண்டது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தார்வாட் தொகுதியில் பாஜக களமிறக்கியது. பாஜக கூட்டணியில் 3 முன்னாள் முதலமைச்சர்கள் களம் கண்டனர்.

பாஜக - காங்கிரஸ்

ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவியிலும் பசவராஜ் பொம்மை ஹவேரி தொகுதியிலும் குமாரசாமி மாண்டியா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியில் களம் கண்டுள்ளார். பாலியல் சர்ச்சைக்குள்ளான இவர் மீது மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு உற்று கவனிக்கப்படுகிறது.

மைசூரு அரச குடும்பத்தை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த வாடியார் மைசூருவில் களம் கண்டார். இரண்டு முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசுகள் மோதும் ஷிமோகா தொகுதி கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா பாஜக சார்பிலும் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும் முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகளுமான கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் சார்பிலும் இங்கு போட்டியிட்டுள்ளனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் கவுடா பெங்களூரு வடக்கு தொகுதியிலும் கர்நாடக துணை முதமைச்சர் டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.

ஆதிக்கம் செலுத்துவது யார்?

கர்நாடகாவில் மக்களவை தேர்தல்களில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது. கடைசியாக நடந்த 4 மக்களவை தேர்தல்களிலும் அக்கட்சியே அங்கு அதிக இடங்களை வென்றுள்ளது. 2009 தேர்தலில் பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 3 இடங்களிலும் வென்றன.

2014 தேர்தலில் பாஜக 17 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. 2019 தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், சுயேச்சை தலா ஒரு தொகுதியிலும் வென்றன.

கடந்த முறை நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடாவில் மோசமான தோல்வியை சந்தித்த காங்கிரஸ் அடுத்த 4 ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

மறுபுறம் மீண்டும் அரியணையில் அமர கர்நாடகாவில் இருந்து கணிசமான தொகுதிகளை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இந்நிலையில் கர்நாடக மக்களின் ஆதரவு யாருக்கு என்பது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது