செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு தொடங்கி அம்மாநிலத்தின் கோலார், மண்டியா, மைசூர் ஹாசன், ராம்நகர், சிக்கப்பல்லபுர, பெல்லரி, சித்ரதுர்கா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிப்பதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சித்தரதுர்கா மாவட்டத்தில் செய்த கனமழையின் காரணமாக மோனகாலூர் தாலுகா மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரிலும் பழுது ஏற்பட்டுள்ள நிலையில், இதை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் மொபைல் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.