இந்தியா

கடைநிலை ஊழியரை அழைத்து நீதிமன்றக் கட்டடத்தை திறக்க வைத்த நீதிபதி..!

கடைநிலை ஊழியரை அழைத்து நீதிமன்றக் கட்டடத்தை திறக்க வைத்த நீதிபதி..!

webteam

கடைநிலை ஊழியரை அழைத்து புதிய நீதிமன்றக் கட்டடத்தை திறக்க வைத்த நீதிபதியின் செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

வி.ஐ.பி.க்கள் அனைவரும் காத்து கொண்டு வரிசையாக நின்றிருந்தனர். அது புதியதாக கட்டப்பட்ட மூன்று மாடி நீதிமன்ற கட்டம். இந்தக் கட்டடம் பெங்களூரிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள சிக்கபல்லபுராவில் உள்ளது. இந்தச் சிகப்பு நிற புதிய கட்டடத்தை திறப்பதற்காகதான் நாம் முன்பே சொன்ன விஜபிகள் வரிசையாக காத்து கொண்டிருந்தது. பெரிய அதிகாரி யாரோ வருவார், கட்டடத்தை திறந்து வைப்பார் என நம்பிக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். ஏனெனில் அப்படி எந்த விஜபியும் அங்கு வரவில்லை.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்ற சீனியர் ஒருவர் அங்கு அழைக்கப்பட்டார். அவரது பெயர், ஜெயராஜ் திமோதி. நீதிபதிகள் அனைவரும் ஒதுங்கி நிற்கின்றபோது அவரை அழைத்து நீதிமன்றத்தை திறந்து வைப்பதற்காக சிகப்பு ரிப்பனை வெட்ட சொல்கிறார்கள். என்னது? இவரா? என அனைவரின் முகத்திலும் ஆச்சரியம். ஆனால், அதிசயம் நடந்தது. உதவியாளர்தான் அந்த நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். உழைப்பாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட கெளரவத்தை நினைத்து அனைவரது முகத்தில் அத்தனை பூரிப்பு, சந்தோஷம். அனைவரும் கைத்தட்டி வரவேற்க அந்த விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்தச் சிறப்புக்கு உரியவர் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா. அவர்தான் அந்த உதவியாளரை தேர்வு செய்து கட்டடத்தை திறந்து வைக்க சொன்னார். ஆகவே அவரது நடவடிக்கையை அனைத்து விஜபிகளும் பாராட்டி வருகின்றனர்.

இந்த எதிர்பாராத ஆச்சரியம் குறித்து ஜெயராஜ் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “இது குறித்து எனக்கு எந்த க்ளுவும் கொடுக்கப்படவில்லை. இது ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி என்பதால் நான் நீதிமன்ற ஊழியர்களுக்கான சீருடை அணிந்திருந்தேன். நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னிடம் மேடை வரை வரச் சொன்னார். ஆனால், மாவட்ட நீதிபதி என்னை அங்கிருந்த பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேற்கொண்டு தலைமை நீதிபதி ஓகா கட்டடத்தை என்னை ரிப்பன் வெட்டி திறக்கச் சொன்னார். நான் அந்த வார்த்தைகளைக் கேட்டு தடுமாறினேன். என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த அபூர்வமான செயலால் நீதிபதி ஓகா தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். இந்த நெகிழ்வான நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.