கர்நாடகாவில் 21 வயது பெண்ணொருவரை கொலை செய்து, அதன்பின் இறந்த அப்பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொண்ட நபர் மீதான வழக்கொன்று நடந்துவந்தது. 2015-ம் ஆண்டு நடந்த அச்சம்பவத்தின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது செஷன்ஸ் நீதிமன்றம். குற்றவாளி தரப்பு, அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அதை நீதிபதிகள் வீரப்பா, வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் நேற்றைய விசாரணையின்போது நீதிபதிகள், "குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த சான்றுகள், இறந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் உட்பட அரசுத் தரப்பு முன்வைத்த சாட்சியங்களின் அடிப்படையில், கொலைக் குற்றம் நிரூபணமாகியிருக்கிறது. ஆனால், அதேநேரத்தில் சடலத்துடன் உறவுகொள்ளும் நெக்ரோபிலியா (Necrophilia) என்ற செயலுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை நீதிமன்றம் ஆய்வுசெய்தது. அதில், இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்பதால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) கீழ் அச்செயலை ஒரு பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதமுடியாது.
ஆகவே குற்றவாளிக்கு கொலைக் குற்றத்துக்கான தண்டனையை வழங்கிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் உறுதிசெய்கிறது. அதேநேரம், பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை ரத்து செய்கிறது.
இவற்றுடன்....
இறந்த நபரின் கண்ணியத்துக்கான உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில், ஐ.பி.சி-யின் 377-வது பிரிவின் விதியை மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. நெக்ரோபிலியாவுக்கு ஒரு தனி விதியை அரசு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்குள் இதை செய்யவேண்டுமென நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.
மேலும் கர்நாடக பிணவறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவவும், சுகாதாரம், தனியுரிமையைப் பராமரிக்கவும், மருத்துவப் பதிவுகள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பிணவறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்" என கூறினர். இந்த Necrophilia, psychosexual disorder என்ற பிரிவின் கீழ் வருவதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது.