Duraimurugan, DK Shivakumar PT web
இந்தியா

காவிரி நீர் திறப்பு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தயாராகும் கர்நாடக அரசு!

காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, வரும் புதன்கிழமை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

Angeshwar G

கர்நாடகத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணை மற்றும் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையின் 124.80 அடியில் 106.68 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. அதேபோல் கபினி அணையின் 84 அடியில் இன்றைய நிலவரப்படி 77.16அடி தண்ணீர் உள்ளது.

காவிரி நீர், உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்காததால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஆற்றில் கபிணி அணையில் இருந்து கடந்த 14 நாட்களாக சராசரியாக 5,000 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து கடந்த 10 நாட்களாக 12,000 முதல் 14,000 கன அடியாக ஏற்ற இறக்கமாகவும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சியிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “மாநில விவசாயிகள் நலனை கருதாமல், மாநிலத்தின் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டிய அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் காலக்கட்டத்தில், அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து இருக்கிறது. இது வேதனையாக உள்ளது. எனவே தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என அம்மாநில எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

டி.கே.சிவகுமார்

இதேபோல கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர், “தமிழகத்துக்கு வழங்கக்கூடிய தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்” என ஆற்றில் இறங்கியும், சாலை மறியலில் ஈடுபட்டும், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை விதான் சௌதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நீர் பாசனத்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையில் மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், விவசாயிகள் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் குறித்தும், கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலவரத்தை நாளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அனைத்து கட்சி கூட்டுவதாகவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு எங்கள் எம்.பி.க்களும் வருவர். காலை 11 மணிக்கு விதான் சௌதாவில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

டி.கே.சிவக்குமார்

இந்த சந்தர்ப்பத்தில் நாம் பல விஷயங்களை கலந்துரையாடவுள்ளோம். தமிழக மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். சட்ட விவகாரத்தை வழக்கறிஞரிடம் விட்டுவிட்டோம். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. கிருஷ்ணா நிரம்பினாலும், வரத்து குறைந்த அளவே தண்ணீர் வருகிறது” என்றார்.