இந்தியா

‘சொல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது’: ஐடி ஊழியர்களுக்கு கர்நாடக அரசு நிபந்தனை..!

jagadeesh

பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்வதென்றால் மாநில அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்பு செல்லுங்கள் என ஐடி மென் பொறியாளர்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இனி இந்தியாவில் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கடந்த திங்கட்கிழமை வெளியான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில்தான், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்துள்ளார். இது பல்வேறு மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனையடுத்து கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவைத் அக்தர் சில அறிவிப்புகளை ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு வெளியிட்டுள்ளார்.

அதன்படி " சீனா, ஈரான், இத்தாலி, கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். அதேபோல கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் பயணியாற்றிவிட்டு வருபவர்கள் விமான நிலையத்தில் நடைபெறும் மருத்துவச் சோதனைக்கு கண்டிப்பாக உடன்பட வேண்டும். மேலும், கடந்த 14 நாள்களில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பியவர்கள் தாங்களாகவே மாநில அரசின் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பின்பு, மீண்டும் பெங்களூரில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மாநில சுகாதாரத்துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.