இந்தியா

ஆட்கொல்லி புலியை தேடும் 150 வனத்துறையினர்.. கர்நாடகாவுக்கு 'தண்ணி காட்டும்' ஒற்றை வேங்கை!

ஆட்கொல்லி புலியை தேடும் 150 வனத்துறையினர்.. கர்நாடகாவுக்கு 'தண்ணி காட்டும்' ஒற்றை வேங்கை!

jagadeesh

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைவாசத்தளம் குடகு மாவட்டம். இங்கு கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி புலி ஒன்று உலா வருவதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால் இது எதுவும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த வாரம் அந்தப் புலி 8 வயது சிறுவனை தாக்கி கொன்றது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இதனால் குடகு மாவட்டமே பீதியில் உறைந்தது. அந்த ஆட்கொல்லி புலி இதுவரை 4 பேரை கொன்றது. இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய குடகு மாவட்டத்தின் எம்எல்ஏ கேஜி போப்பையா "வனத்துறையால் ஆட்கொல்லி புலியை பிடிக்கவோ கொல்லவோ முடியவில்லை என்றால் எங்களிடம் தெரியப்படுத்தவும். நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து புலியை கொன்று அதனை கொடவா இனத்தின் முறைப்படி கல்யாணம் செய்துக்கொள்வோம்" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அம்மாநில வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி "வனத்துறை அதிகாரிகளிடம் ஆள்கொல்லி புலியை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தப் புலியை தேடும் பணி அயர்ச்சி இல்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் புலியை தேடி கர்நாடக மாநில வனத்துறையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில தன்னார்வலர்களும் தங்களை ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் ஈடுபடுத்திகொண்டுள்ளார்கள்.

கர்நாடக மாநிலத்தில் மட்டும் 2020-2021 ஆண்டில் புலியால் மனிதர்களும் கால்நடைகளும் தாக்கப்பட்டதாக 434 புகார்கள் வனத்துறையில் பதிவாகி இருக்கிறது.இது 2019 - 2020 இல் 316 புகார்கள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து ஒரே ஆண்டில் மட்டும் 37 சதவிதம் புலியால் தாக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது. கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் புலியால் 9 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 12 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். புலிகள் கணக்கெடுப்பின்படி கர்நாடக காடுகளில் 524 புலிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.