இந்தியா

மனிதத்தன்மையற்ற செயல்’: 3ரூ, 46 பைசா கடனுக்காக விவசாயியை 15 கி.மீ நடக்க வைத்த வங்கி

மனிதத்தன்மையற்ற செயல்’: 3ரூ, 46 பைசா கடனுக்காக விவசாயியை 15 கி.மீ நடக்க வைத்த வங்கி

webteam

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வங்கியில் பெற்றிருந்த கடனை அடைப்பதற்காக 15 கிமீ நடந்தே சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி லஷ்மி நாராயணன். இவர், நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ 35 ஆயிரம் ரூபாய்க்கு கடன் பெற்றிருந்தார். இதில், ரூ32 ஆயிரத்தை அரசு தள்ளுபடி செய்தது. மீதமுள்ள 3 ஆயிரம் ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் செலுத்தியிருந்தார் லஷ்மி நாராயணன். இந்தநிலையில், வங்கியின் அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு, கடன் தொகையின் மீதத்தை செலுத்த உடனடியாக வருமாறு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பேருந்து வசதி இல்லாத நிலையில், விவசாயி லஷ்மி நாராயணனும் நடந்தே வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் செலுத்த வேண்டிய தொகை வெறும் 3 ரூபாய் 46 பைசாக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்த உடனேயே அவர் அதிருப்தி அடைந்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “வங்கியில் இருந்து போன் செய்து உடனே வருமாறு கூறினார்கள். அதனால், பீதியடைந்தேன். ஊடங்கு காரணமாக பேருந்து சேவை எதுவும் இல்லை. என்னிடம் எந்த வாகனமும் இல்லை. ஒரு சைக்கிள் கூட இல்லை. நடந்தே வங்கிக்கு சென்று சேர்ந்தேன். அங்கு நான் கட்ட வேண்டிய தொகை 3 ரூபாய், 46 பைசாக்கள் என்று தெரிவித்தார்கள். வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்ன காயப்படுத்திவிட்டது” என்றார்.

இதுகுறித்து வங்கியின் மேனேஜர் பிங்வா, ‘தணிக்கை நடந்து கொண்டிருந்தது. அவரது கடன் கணக்கை முடிக்க வேண்டியிருந்தது. அதற்கு அவர் 3 ரூபாய், 46 பைசாக்கள் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், அவருடைய கையெழுத்தம் தேவைப்பட்டது’ என்றார். வங்கியின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.