இந்தியா

எடியூரப்பாவுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

எடியூரப்பாவுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

webteam

எடியூரப்பா ஆட்சி அமைப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சி மனு மீது உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் நடைபெற்று வருகின்றது. 

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆளுநர் நேற்றிரவு 9 மணியளவில் பாஜகவுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு பிறகு உடனடியாக காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 

நீண்ட ஆலோசனைக்கு பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் 6வது அறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. 

எடியூரப்பா சார்பில் வாதாடிய முகுல் ரோஹ்தகி, “ஒரு கட்சி தேர்தலில் தனிப்பெரும் வெற்றியை பெற்ற கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. அதைத்தான் அவர் செய்துள்ளார். ஒருவேளை அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அடுத்தபடியான கட்சிக்கு அழைப்புவிடுக்கப்படும். கோவாவில் தனிப்பெரும் வெற்றி பெற்ற கட்சியான காங்கிரஸ் ஆட்சியமைக்க கோரவில்லை. அதனால் இதனை அதோடு ஒப்பிட இயலாது” என்று கூறினார். 

அதேபோல் காங்கிரஸ்-மஜத சார்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி, “நாங்கள் கர்நாடக ஆளுநரை எதிர்க்கவில்லை; கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த அவரின் முடிவைதான் எதிர்க்கிறோம். பாஜகவிற்கு தெளிவான பெரும்பான்மை இல்லை. எனவே ஆளுநர் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது. டெல்லி, கோவா உட்பட 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது” என்று கூறினார்.

அதேபோல், சர்க்காரிய ஆணையத்தின் பரிந்துரைகளை சுட்டிக் காட்டியும் காங்கிரஸ்-மஜத கூட்டணியை அழைத்திருக்க வேண்டும் என்று சிங்வி வாதாடினார். குறிப்பாக ஆளுநரின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று நீதிபதிகளை அவர் வலியுறுத்தி வாதங்களை அடுக்கிக் கொண்டே சென்றார்.