பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம் Screenshot
இந்தியா

சூடுபிடிக்கும் கர்நாடகத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. மும்முனை போட்டியில் முந்தப்போவது யார்?

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கிருக்கும் கட்சிகளின் வியூகங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Prakash J

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை 75 இடங்களில் வெற்றிபெற்ற போதும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.

முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தாவலால், பாஜகவிடம் இரு கட்சிகளும் ஆட்சியைப் பறிகொடுத்தன. இந்த நிலையில், எதிர் வரும் பொதுத்தேர்தலில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பெரும்பலனைத் தரும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

காங்கிரஸ்

கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி கொடுத்திருப்பது, ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, கர்நாடகத்தில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்னைகள், இடஒதுக்கீடு ரத்து போன்ற அம்சங்களை தனது ஆயுதங்களாகக் கையில் எடுக்க வியூகம் காங்கிரஸ் வகுத்துள்ளது.

பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் மீதான ஊழல், லஞ்சப் புகார்களும் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. மற்றொரு புறம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாரதிய ஜனதாவை இலக்காக வைத்து வியூகம் வகுக்கிறது. விவசாயப் பகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அதிகம் என்பதால், விவசாயிகளை இலக்காகக் கொண்டு அக்கட்சி செயல்படுகிறது.

பாஜக

பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால், மாநிலத்துக்கு அதிக நன்மை கிடைக்கும் என்ற பிரசாரத்தை மையப்புள்ளியாகக் கொண்டு அக்கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், கர்நாடகத்தில் சீரான இடைவெளியில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த மும்முனைப் போட்டியால், கர்நாடக தேர்தல் களம், இப்போதே தகிக்கத் தொடங்கியிருக்கிறது.

- நிரஞ்சன் குமார்