இந்தியா

கர்நாடக தேர்தல் தேதி முன் கூட்டியே கசியவில்லை: கமிட்டி அறிக்கை

webteam

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி முன் கூட்டியே கசிந்ததாக கூற முடியாது என அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி முன் கூட்டியே கசிந்ததாக கூறி அது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அக்கமிட்டி இன்று அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி அத்தேதிகளை வெளியிட்டதை தகவல் கசிவு என கருத முடியாது என்றும், அதை ஊகம் என்றே கருத வேண்டியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பல்வேறு தரப்பு தகவல்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் வைத்து முடிவுக்கு வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தகவல் ரகசியம் காப்பது தொடர்பான சில தனிப்பட்ட ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்துகொள்வோம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தல் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் முன்னரே அவை ஆங்கிலத்தொலைக்காட்சியில் வெளியாகி இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது