கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. 10 மணி நிலவரப்படி பாஜக 109 இடங்களிலும் காங்கிரஸ் 68 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களிலும் முன்னிலைப் பெற்றிருந்தது. தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி, பிறகு சர்ரென பின்னுக்குத் தள்ளப்பட்டது. பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பாஜகவுக்கு 112 இடங்கள் தேவை. இந்த எண்ணிக்கையை பாஜக நெருங்கிவிட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மேலும் சில இடங்களை பாஜக கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது. அப்படி கைப்பற்றினால் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். இதையடுத்து கர்நாடகாவில் பாஜக தொண்டர்கள் தங்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.