இந்தியா

வயிறா இல்ல உண்டியலா? - 187 காயின்களை விழுங்கிய கர்நாடக நபர்... ஏன் தெரியுமா?

வயிறா இல்ல உண்டியலா? - 187 காயின்களை விழுங்கிய கர்நாடக நபர்... ஏன் தெரியுமா?

JananiGovindhan

வயிற்று வலி பிரச்னைக்காக சிகிச்சைக்கு வந்த நோயாளியின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட சில்லறை காயின்கள் இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்திருக்கிறது. இதைக்கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துப் போயிருக்கிறார்கள். கர்நாடகாவின் பாகல்கோட் நகரத்தில் உள்ள ஹங்கல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனையில்தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

ராய்சுர் மாவட்டத்தின் லிங்சுகூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதான தியாமப்பா ஹரிஜன். இவர் schizophrenia என்ற மனக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வயிறு வலி, வாந்தி போன்ற தொந்தரவுகளுக்காக ஹரிஜன் பாகல்கோட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், ஹரிஜனின் வயிற்றில் எக்கச்சக்கமான சில்லறை நாணயங்கள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அப்போதுதான் ஹரிஜன் சுமார் 1.5 கிலோ அளவுக்கு 5 ரூபாய் காயின்கள் 56, 2 ரூபாயில் 51, 1 ரூபாயில் 80 என 187 நாணயங்களை விழுங்கியது மருத்துவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

மனதளவிலான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஹரிஜனுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாததால் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். இது குறித்து பேசியுள்ள மருத்துவர் ஈஷ்வர் கலபுர்கி, “அறுவை சிகிச்சை செய்வதை காட்டிலும், ஹரிஜன் வயிற்றில் இருந்து சில்லறை காயின்களை எடுப்பதே சவாலான செயலாக இருந்தது.

நிறைய நாணயங்களை உட்கொண்டதால் அவருடைய வயிறு பெரிதாகியிருக்கிறது. இதனால் வயிற்றின் பல பகுதிகளில் காயின்கள் சிக்கியிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மணிநேரத்துக்கு பிறகு வயிற்றில் இருந்த எல்லா காயின்களையும் வெளியே எடுத்திருக்கிறோம். ஹரிஜன் தற்போது நலமுடன் இருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.