Elephant pt desk
இந்தியா

அடேங்கப்பா..! யானையுடன் மடாதிபதியை துலாபாரத்தில் நிறுத்தி எடைக்கு எடையாக 5 டன் நாணயங்கள் காணிக்கை!

மனிதர்களை துலாபாரத்தில் அமரவைத்து அல்லது நிற்க வைத்து எடைக்கு எடை போடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு யானையை துலாபாரத்தில் நிறுத்தி அதற்கு இணையாக நாணயங்களை எடையிட்டு காணிக்கையாக செலுத்தியுள்ள சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டம் ஷிரஹட்டி ஃபக்கீரேஸ்வரர் மடத்தின் மடாதிபதியான ஃபகிரா சித்தராம சுவாமியின் 75வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் மடத்தின் சார்பில் ஓராண்டு காலம் பாவைக்யதா ரத யாத்திரை நடத்தப்பட்டது.

Elephant

அதேபோல் மடத்தின் 60 வது ஆண்டு விழாவையொட்டி ஜம்போ துலாபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யானை மீது தேக்கு மர அம்பாறியில் மடத்து மாதிபதி ஃபக்கீர சித்தராம சுவாமி அமர்ந்திருக்க யானையை துலாபாரத்தில் நிறுத்தி வைத்து எடை போட்டனர். அதன் மொத்த எடை சுமார் 5,555 கிலோ இருந்தது.

இந்த எடைக்கு நிகராக வங்கிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் துலாபாரத்தில் வைக்கப்பட்டது. இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ.73.40 லட்சமாக இருந்தது. இந்தத் தொகை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என மடத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elephant

பொதுவாக குழந்தைகளை துலாபாரத்தில் நிறுத்தி எடைக்கு எடை அரிசியோ பணமோ அல்லது வெள்ளியோ கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு யானையின் எடைக்கு எடை நாணயங்களை துலாபாரத்தில் வைத்த நிகழ்வு நடந்திருப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.