செய்தியாளர்: ம. ஜெகன்நாத்
கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மூத்த மகனும், சட்டமன்ற எம்.எல்.சியுமானவர் சூரஜ் ரேவண்ணா (36). இவரது ஆதரவாளரான சிவக்குமார் (35) என்பவர் கடந்த மாதம் 21ம் தேதி, ஹொளேநரசிபுரா காவல் நிலையத்தில் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், சூரஜை மிரட்டி 5 கோடி ரூபாய் பறிக்க முயற்சி நடப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி அரிசிகெரே இளைஞர், சூரஜ் மீது ஹொளேநரசிபுரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை பதிவு செய்தார். இந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் 23ம் தேதி சூரஜை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரஜ், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன், அவரை காவலில் எடுத்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சூரஜ் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சிவக்குமார், ஹொளேநரசிபுரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின்படி, சூரஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவானது. இதில் சிஐடி போலீசார், சூரஜ் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி கடந்த 3 ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைத்தனர். இதனால் தற்போது அவர், நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதற்கிடையில் சூரஜ் தரப்பிலிருந்து, ஜாமீன் கோரி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட்ட நீதிபதி, இதில் ஆட்சேபனை இருக்கிறதா என தெரிவிக்க சிஐடி போலீசாருக்கு சம்மன் அனுப்பி, விசாரணையை ஒத்திவைத்தார்.
பின் இதே மனு மீதான விசாரணை இரண்டு முறை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மீண்டும் அது நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று அவர் பரப்பன அக்ராஹாரா சிறையில் இருந்து வெளியே வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு உள்ளது. அதில் அவருக்கு ஜாமீன் இல்லை என்பதால் வெளியே வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.