BJP MLA pt desk
இந்தியா

கர்நாடகா: அமைச்சர் மனைவி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக எம்எல்ஏ-வை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குடும்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னல், "தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அவர் அப்படி குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்த தபஸ்ஸம் ராவ், பாஜகவின் சமூக வலைதள பிரிவு மற்றும் பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல் குறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், “நான் அரசியலில் ஈடுபடாத போது, அரசியல் காரணங்களுக்காக என்னை விமர்சிப்பது சரியல்ல. பெண்களை மதிப்பது முக்கியம். பிற மதங்கள் மீது நன்மதிப்பு இல்லாவிட்டாலும், பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பது சரியல்ல. அரசியல் முரண்பாடுகளுக்காக, குடும்பத்தினரை பொதுவெளியில் விமர்சிப்பது ஏற்க முடியாது” என்று தபஸ்ஸம் ராவ் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

court order

அந்த விசாரணையின் போது ஆஜராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாததால், பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து, அடுத்த விசாரணையை அக். 28-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது