இந்தியா

‘நித்யானந்தாவின் சொத்து விவரங்களை சேகரியுங்கள்’ - நீதிமன்றம் உத்தரவு

‘நித்யானந்தாவின் சொத்து விவரங்களை சேகரியுங்கள்’ - நீதிமன்றம் உத்தரவு

webteam

தலைமறைவா‌க உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தாவின் கார் ஓட்டுநராக இருந்த லெனின் கருப்பன், பிடதி ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகக் கூறி 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், அவரது ஜாமீனை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு, நித்யானந்தா உள்ளிட்ட 6 குற்றம்சாட்டப்பட்டவர்களும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. எனினும், ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நித்யானந்தா மற்றும் அவரது செயலர் கோபால் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் கோபால் ரெட்டி ஆகியோரது சொத்து விவரங்களை சேகரிக்குமாறு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பிடதி ஆசிரமம் மற்றும் நித்யானந்தாவுக்கு சொந்தமான பிற ஆசிரமங்கள் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.