இந்தியா

6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை

6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை

Veeramani

தொலைக்காட்சிகள் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் பாலியல் டேப்பை வெளியிட்டதால், அவர் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து 6 அமைச்சர்களுடைய "அவதூறு" உள்ளடக்கத்தைக் காண்பிப்பதில் இருந்து கர்நாடக நீதிமன்றம், ஊடகங்களுக்கு தற்காலிக தடை உத்தரவு வழங்கியது.

கர்நாடக முதல்வர் பி.எஸ்,எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில், 6 அமைச்சர்கள் இந்த தடை உத்தரவைக்கோரி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை நாடினர். இதனால் ஆறு கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக எந்தவொரு "அவதூறு" மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளையும் ஒளிபரப்பவோ அல்லது வெளியிடவோ ஊடக அமைப்புகளுக்கு எதிராக நகர நீதிமன்றம் சனிக்கிழமை தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தது.

எனவே, “அடுத்த விசாரணை தேதி வரை இந்த இடைக்கால உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். எந்தவொரு அவதூறு செய்திகளையும் ஒளிபரப்புவது அல்லது வெளியிடுவது அல்லது புழக்கத்தில் விடுவது அல்லது இடுகையிடுவது, இடமளிப்பது அல்லது பரப்புதல் அல்லது குற்றம்சாட்டப்பட்ட குறுந்தகடுகள் தொடர்பாக வாதிகளைக் குறிக்கும் காட்சிகளையும் படங்களையும் காண்பிப்பதில் இருந்து அவை தடைசெய்யப்பட்டுள்ளன" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழிலாளர் துறை அமைச்சர் சிவரம் ஹெப்பர், வேளாண் அமைச்சர் பி.சி. பாட்டீல், கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ் டி சோமாஷேகர், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சர் கே சி நாராயண கவுடா மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரதி பாசவராஜ்  ஆகிய ஆறு அமைச்சர்களுமே இந்த தடையை பெற்றவர்கள். நிரந்தர தடை உத்தரவை பெறுவதற்காக இந்த ஆறு பேரும், 68 பேர் மீது, பெரும்பாலும் ஊடக அமைப்புகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

முந்தைய காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக, பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்..க்களில் இந்த ஆறு அமைச்சர்களும் அடங்குவர். இவர்களின் ராஜினாமாவால் கடந்த 2019 ஜூலையில் குமாரசாமி அரசாங்கம் வீழ்ச்சியடைந்து பாஜக ஆட்சிக்கு வர வழி வகுத்தது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரமேஷ் ஜர்கிஹோலியும் இந்த 16 எம்எல்ஏக்களில் ஒருவர்தான்.