எம்.பி டி.கே. சுரேஷ் புதிய தலைமுறை
இந்தியா

“தனி நாடு கோரிக்கையை எழுப்ப வேண்டியது வரும்” - கர்நாடக காங்கிரஸ் எம்.பி DK சுரேஷ்

தனிநாடு கோரிக்கையை எழுப்ப வேண்டியது வரும் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார் கர்நாடக காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ்

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடாளுமன்ற மக்களவை இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதன்மீது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் வைத்து வந்தனர்.

அந்தவகையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பியுமான டி.கே.சுரேஷ், “இதேநிலை நீடித்தால் தனி நாடு கோரிக்கை எழும்” என்று தெரிவித்துள்ளார். இந்த விமர்சனம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி டி.கே. சுரேஷ்

இது குறித்து அவர் தெரிவித்திருந்த விமர்சனத்தில், “இந்த பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. இது தேர்தலுக்கான பட்ஜெட் மட்டுமே. மற்றபடி திட்டங்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. அதுவும் சமஸ்கிருந்தப் பெயர்களையே உருவாக்கி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய வரியை வழங்கவில்லை. இதன்மூலம் தென் இந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

மேலும் தென் இந்திய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வரி வருவாய்கள் வட இந்திய மாநிலங்களுக்குதான் கொடுக்கப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரை மத்திய அரசு வரியாக ரூ 4 கோடியை பெறுகிறது. ஆனால் எங்களுக்கு வழங்கும் தொகையோ சொற்பதொகையே. இது குறித்து நாம் கேள்வி கேட்க வேண்டும். இதனை சரிசெய்யாவிட்டால் தனி நாடு கோரிக்கையை எழுப்ப வேண்டியது வரும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் “ஒட்டுமொத்த நாடும் ஒன்றுதான். இந்தி பேசும் மாநிலங்களுக்கு என்று நீங்கள் முக்கியத்துவம் தர முடியாது. கர்நாடகா, மத்திய அரசுக்கு அதிக அளவு வருவாயை கொடுக்கிறது. ஆனால் தென் இந்தியாவுக்கென்று எந்த பெரிய திட்டங்களும் வழங்கப்படவில்லை. நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியா ஒன்றாகதான் இருக்க வேண்டும். ஆகவே பிராந்திய வாரி கோரிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவக்குமார்

இவரை போல காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “தனி நாடு கோரிக்கை என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடோ கொள்கையோ இல்லை. சுரேஷின் கருத்துக்கு நீங்கள் அவரிடம்தான் விளக்கம் கேட்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.