கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்று அமைச்சர் டிகே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவே, அக்கட்சியுடன் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக தேர்வானார். ஆட்சி அமைத்தது முதலே இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்குள்ளும் சலசலப்பு நிலவி வந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 எம்எல்ஏக்களும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 3 பேர் தலைமைச் செயலகம் சென்றுள்ளனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்சி நீடிக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதனையடுத்து கர்நாடக துணை முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பரமேஸ்வரன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவகுமார், “காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். நான் அவர்களை சந்திக்க போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தலைமை செயலகம் சென்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க சென்ற போது சபாநாயகர் சட்டப்பேரவையில் இல்லை. இதுகுறித்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், “நான் என்னுடைய சொந்த வேலை காரணமாக வெளியே சென்று இருந்தேன். என்னுடைய அலுவலகத்திடம் பேசி அவர்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொள்ள சொல்லிருந்தேன். நாளை விடுமுறை என்பதால் இந்தக் கடிதத்தை நான் திங்கட்கிழமை பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.