கர்நாடகாவில் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள தசரா வாழ்த்து விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்த்து விளம்பரம் என்ற பெயரில் காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகளை சாடியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - பாஜக இடையே போஸ்டர் மற்றும் விளம்பரம் யுத்தம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தசரா விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில், அரசை கவிழ்க்க முயற்சிக்கும் துஷ்ட சக்திகளை தாய் சாமுண்டீஸ்வரி தண்டிக்கட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, விளம்பரம் அளிப்பதால் சித்தராமையாவின் பாவம், ஊழல் சரியாகிவிடாது என குறிப்பிட்டுள்ளது. ராமன் பாதையில் நடக்கும் சித்தராமையா, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ராமனைப் போல் சத்திய சோதனையை எதிர்கொள்ளட்டும் என குறிப்பிட்டுள்ளது.