மோடி, தேவகவுடா, சித்தராமையா ட்விட்டர்
இந்தியா

கர்நாடக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு | மோடி பேச்சுக்கு காங். பதிலடி... கூட்டணிக் கட்சிக்கு சிக்கல்?

கர்நாடகாவில் முஸ்லிம் மக்களுக்கு காங்கிரஸ் அரசு இடஒதுக்கீடு அளித்தது தொடர்பாக பிரதமர் மோடி பேசியிருந்ததற்கு, அம்மாநில முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash J

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நாளையும் (ஏப்ரல் 26), அடுத்து உள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே அம்மாநிலத்தில், இஸ்லாம் மதத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் தற்போது காங்கிரஸ் அரசால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாஜக சார்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத ‘மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு’ வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது. உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. இதனால் அம்பேத்கரையும் அவமதித்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர் | அமெரிக்காவில் பல்கலை மாணவர்கள் போராட்டம்.. கைதுசெய்யும் காவல்துறை! #Viralvideo

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். “பிரதமர் மோடி கூறியிருப்பது அப்பட்டமான பொய்” எனக் கூறியிருக்கும் அவர், “மோடி அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேவகவுடாதான், 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால், அதனை காங்கிரஸ்தான் செய்தது என மத்தியப் பிரதேச பரப்புரையின்போது மோடி தெரிவித்திருந்தார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த தேவகவுடா இன்னும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது நரேந்திர மோடியிடம் சரணடைந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா? என்பதை கர்நாடக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ராஜஸ்தான் | “I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும்” - பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்

வரலாற்றில் நடந்தது என்ன?

கர்நாடகாவில் 1995ஆம் ஆண்டில் ஜேடிஎஸ் கட்சியில் ஆட்சியில் இருந்தபோது, தேவகவுடா முதல்வராக இருந்தார். அப்போது ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க 2பி என்ற தனித்துவமான வகைப்பாடு கொண்டுவரப்பட்டது. பின்னர் வந்த முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதோடு முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்த்தது. ஆனால் பாஜக அரசின் இந்த முடிவை அமல்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.

தற்போது....

இந்த நிலையில்தான் மீண்டும் ஓபிசி பட்டியலில் முஸ்லிம்களை காங்கிரஸ் அரசு சேர்த்திருப்பதை, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சிக்கும், அதன் தலைவர் தேவகவுடாவுக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர். தற்போது மோடியின் பேச்சால், அந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே தேவுகவுடா கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: உ.பி.| பாஜக சிட்டிங் எம்பியான கணவரை எதிர்த்து களத்தில் குதித்த மனைவி!