புதிய முதல்வராக கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் 40-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை, லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவு வலுத்து வருவதாகவும், பொம்மை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் அம்மாநில பாஜக தலைவர்கள் கருதுகின்றனர்.
முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள எடியூரப்பாவும், லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்களும் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின்போது, பசவராஜ் பொம்மை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைமையின் பிரதிநிதிகளாக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முருகேஷ் நிரானி மற்றும் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருக்கும் பாஜகவின் கர்நாடக மாநில தலைவர்கள் பலரும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதேபோலவே பி.எல்.சந்தோஷ் மற்றும் சிடி ரவி ஆகியோரின் ஆதரவாளர்களும் பாஜக தலைமைக்கு தொடர்ந்து தகவல் அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படி பலரும் போட்டியில் இருந்தாலும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மைக்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அரவிந்த் பெல்லட், அசோக் மற்றும் பசன்னகவுடா பாட்டீல் ஆகியோரும் முதல்வர் பதவிக்கு முயற்சி செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமையின் அறிவுரைப்படியே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி
மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கட்சியின் தேசிய தலைவராக ஜேபி நட்டா ஆலோசனைப்படி தேர்ந்தெடுக்கும் நபர் புதிய முதல்வர் ஆவார் எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.
- கணபதி சுப்ரமணியம்