இந்தியா

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

webteam

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கப்பட உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, ‌பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா, ஜூலை மாதம் முதலமைச்சர் ஆனார். பிற அமைச்சர்கள் இன்னும் பதவியேற்கவில்லை. முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால், அமைச்சரவை விரிவாக்கப் படாமல் உள்ளது. 

இதுகுறித்து 2 நாள்களுக்கு முன் டெல்லி சென்ற முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்து, அமைச்சரவையை இறுதி செய்திருப்பதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி முதல்கட்டமாக 14 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோகா, ஸ்ரீராமுலு உள்ளிட்ட கர்நாடக பாரதிய ஜனதா மூத்ததலைவர்களும், எம்எல்ஏக்கள் சுனில்குமார், அங்காரா, மேலவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட புதுமுகங்களும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.