viral video image x page
இந்தியா

வாக்காளர்களுக்கு மதுவுடன் விருந்து.. வைரலான வீடியோ.. வசமாய் சிக்கிய பாஜக.. பதிலளித்த எம்பி!

கர்நாடகாவில் மது பாட்டில்களை வரிசையில் நின்று பாஜக தொண்டர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.

Prakash J

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. என்றாலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்திருந்தன. இதில் பாஜக 17 இடங்களிலும், ஜனதா தளம் 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றவர் டாக்டர் கே.சுதாகர். இவர், தம்மைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை பாஜக மற்றும் ஜனதா தள கூட்டணி ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக எம்எல்ஏ தீரஜ் முனிராஜு மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது பாஜக தொண்டர்களுக்கு அசைவ உணவுடன் மது பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விருந்து நடந்தப்போவதாக போலீசிடம் அனுமதி வாங்கப்பட்டு, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விநியோகம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான மது பாட்டில்களை வரிசையில் நின்று பாஜக தொண்டர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.

இதையும் படிக்க: ஒரு போட்டி கூட விளையாடாத வீரர்களுக்கும் ரூ.5 கோடி| ரூ.125 கோடி பரிசுத் தொகை-யார், யாருக்கு எவ்வளவு?

இதையடுத்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ”இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் சொல்லியே ஆக வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் கே.சுதாகர்

இதற்கிடையே பாஜக எம்பி டாக்டர் கே.சுதாகர் இந்நிகழ்ச்சியின்போது, அதாவது மது விநியோகத்தில் இருந்து விலகி இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர், “எனக்கு இதுபற்றி தெரியாது. என்னையும் எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கையும் பாராட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். நாங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தோம். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை மீடியாக்கள் மூலம்தான் அறிந்துகொண்டேன்.

அமைப்பாளர்கள் அதைச் செய்தார்களா அல்லது அங்கு வந்தவர்கள் சாப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் பாஜகவோ அல்லது ஜேடிஎஸ் கட்சியோ என யார் அதைச் செய்திருந்தாலும் அது தவறுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நடிகர் தர்ஷனுக்கு கைதி எண் 6106.. டாட்டூ போடும் ரசிகர்கள்.. ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!