நடிகர் தர்ஷன் எக்ஸ் தளம்
இந்தியா

“நீதி வேறு,நட்பு வேறு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கணும்”-தர்ஷன் வழக்கில் டாப் நடிகர் கருத்து

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தப்படி உள்ளன.

முன்னதாக, கொலையை ஒப்புக்கொள்வதற்காக நடிகர் தர்ஷன் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இந்தக் கொலைக்கு போலீஸ் ஒருவர் உதவியதாகவும் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ‘உடலில் 15 காயங்கள் இருந்ததாகவும், அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக இறந்துபோயுள்ளார்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கார் டிரைவர் ரவி அளித்த வாக்குமூலமும் துருப்பாக மாறியுள்ளது.

இதற்கிடையே இவ்விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நடிகர் தர்ஷனைப் பாதுகாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ”வரவிருக்கும் சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில் தர்ஷனை களமிறக்குவதற்காகவே, மாநில காங்கிரஸ் பாதுகாக்கிறது” என பாஜக தலைவர் சிபி யோகேஷ்வர் தெரிவித்திருந்தார். ஜனதா தளம் (மதசார்பற்ற) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ’’இந்த விவகாரத்தில் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை’’ என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மறுத்திருந்தார்.

இதையும் படிக்க: வேலைக்கு வெளிநாடு செல்லும் இந்தியர்கள்.. உணவு இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் அவலம்...

இந்த நிலையில், "இந்த விவாகரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது நடைபெறும். நானும், முதல்வர் சித்தராமையாவும் எந்த ஒரு பரிசீலனையும் இன்றி நடவடிக்கை எடுப்போம். யாரையும் பாதுகாப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோன்ற விஷயங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்" என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு குறித்து நடிகர் கிச்சா சுதீப் , "இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நீதி வேறு; நட்பு வேறு. ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது முக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடிகை பவித்ரா கவுடா வழக்கமாக காலை 7 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகாததால், போலீஸ் கமிஷனர் தயானந்த், அவரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வழக்கமாக நடிகை என்பதால் போலீஸ் நிலைய பெஞ்சில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தாமதமாக வந்ததால் தரையில் இருக்க வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: ரஷ்யா - உக்ரைன் போர்... தீர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த அமைதி உச்சி மாநாடு.. கையெழுத்திடாத இந்தியா.