இந்தியா

‘வாகனங்களுக்கு தீ வைப்பு; கடைகள் உடைப்பு’-பஜ்ரங் தள உறுப்பினர் கொலை; கர்நாடகாவில் பதற்றம்

‘வாகனங்களுக்கு தீ வைப்பு; கடைகள் உடைப்பு’-பஜ்ரங் தள உறுப்பினர் கொலை; கர்நாடகாவில் பதற்றம்

ஜா. ஜாக்சன் சிங்

கர்நாடகாவில் பஜ்ரங் தள உறுப்பினர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவை சேர்ந்த பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினர் ஹர்ஷா என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்த சூழலில், இந்தக் கொலை நடந்திருப்பது அங்கு இரு தரப்பு மக்கள் இடையே மோதல் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹர்ஷாவின் கொலையை கண்டித்து ஷிவமோகாவில் இன்று சில இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடைகளையும், தனியார் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஷிவமோகாவில் கூட்டம் கூடவும், போராட்டம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பதற்றமான பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, "இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். எனவே, இந்த விஷயத்தை முன்வைத்து யாரும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம். சட்டம் - ஒழுங்கை காக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் கூறியிருக்கிறார்.

மாநில உள்துறை அமைச்சர் அரஹ ஞானேந்திரா கூறுகையில், "ஹிஜாப் விவகாரத்துக்கும், ஹர்ஷா கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். போலீஸ் விசாரணை முடியும் வரை, இதில் எந்த முடிவுக்கும் வர முடியாது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்றார்.