கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர்.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்துடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்களான ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக ஆளுநருக்கு அவர்கள் இருவரும் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசுக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை உடனடியாக திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் வாபஸ் பெறுவதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
ஏற்கனவே கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல், எம்.எல்.ஏக்களை விலை பேசுதல் என்ற குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது, அரசியல் பரபரப்பை பங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பேரின் வாபஸினால் கர்நாடக அரசின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 119ல் இருந்து 117 ஆக குறைந்துள்ளது. பாஜகவிற்கு இன்னும் கூடுதலாக நான்கு எம்.எல்.ஏக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்தால் பாஜக ஆட்சி அமையும் வாய்ப்பும் அங்கு இருக்கிறது.
இருப்பினும் இரண்டு எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதால் ஆட்சிக்கு தற்போது எந்த ஆபத்தும் இருக்காது. ஆனால் வருங்காலத்தில் இது ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடக அரசு மக்களவை தேர்தலின் போது கடும் நெருக்கடியை சந்திக்கலாம் என்றும், அந்தத் தேர்தலுடன் கர்நாடக சட்டசபைத் தேர்தலையும் நடத்த முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
முன்னதாக, முதலமைச்சர் குமாரசாமி பேசியிருந்தபோது, “கர்நாடகாவில் தமது ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. பாஜகவுடன் சேர்வதாக கூறப்பட்ட 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தன்னிடம் தெரிவித்துவிட்டுதான் மும்பை சென்றனர். அவர்கள் தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.