ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ தன்னுடைய பிறந்தநாளை கிராம மக்களுடன் கொண்டாடியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் நாளுக்கு நாள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா
பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். வரும் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கக்கோரி வலியுறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே
பொதுமக்கள் வெளியே வர வேண்டுமென்றும், அப்படி வருபவர்களும் முறையான சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமென்றும்
அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவையின்றி வெளியில் நடமாடுபவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் துருவக்ரே தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெயராம் தன்னுடைய பிறந்தநாளை தன் தொண்டர்களுடன் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்கக்கோரி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவரே இப்படி விழிப்புணர்வு இல்லாமல் நடந்துகொண்ட சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.