போக்குவரத்து வசதி இல்லாததால், எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவின் தொட்டனே கிராமத்தில், போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை சார்பில் ஜீப்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சாமராஜநகரில் உள்ள வனத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 'ஜன வன சேது' என்ற சிறப்பு முயற்சியை சில வாரங்களுக்கு முன் துவக்கி, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாகனங்கள் வழங்க உறுதியளித்தனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சாந்தலா என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீப் ஓட்டுநர் மற்றும் அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் வராததால்,வேறு வழியின்றி தொட்டில் கட்டி நிறைமாத கர்ப்பிணியை எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாக , மருத்துவமனைக்கு சுமந்து சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் அடர்ந்த வனப்பகுதியில் மலையேற்றத்தை தொடங்கிய உள்ளூர் மக்கள், மருத்துவமனையை அடைய நான்கு மணி நேரம் ஆனது.