கன்வார் யாத்திரை எக்ஸ் தளம்
இந்தியா

கன்வார் யாத்திரை| கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Prakash J

உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை இன்று (ஜூலை 22) தொடங்கியது. இந்த யாத்திரை, ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த யாத்திரையின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், இந்த யாத்திரை செல்லும் வழித்தடங்களில் அசைவ உணவு விற்பனை செய்யப்படுவதை உத்தரப் பிரதேச அரசு கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையும் படிக்க: ஆபரேஷனில் சிக்கிய ஊசி! வலியால் துடித்த பெண்.. அலட்சியத்தில் மருத்துவமனை.. 20 ஆண்டுக்கு பிறகு நஷ்டஈடு

இந்த உத்தரவு, முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, முஸ்லிம் வணிகர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுதுவது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த பெயர்கள் எழுதும் முடிவு குறித்து 2 மாநில அரசுகளும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்|சாலை அமைக்க எதிர்ப்பு.. போராடிய 2 பெண்கள் மீது மண்ணைக் கொட்டி மூடிய கொடூரம் #Video