உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 59 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே, அங்குள்ள ஹட்சன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பிற்பகல் சென்றார். அப்போது தான் வாக்களிப்பதை தனது செல்போன் மூலம் படம்பிடித்த அவர், அதுதொடர்பான வீடியோவையும், புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தார்.
இந்த காட்சி பகிரப்பட்ட சில மணிநேரங்களில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வாக்களிப்பது தனி நபர் ரகசியம் என அரசியலமைப்புச் சட்டம் கூறும் போது, அதனை மீறும் வகையில் பிரமிளா பாண்டே செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, கான்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிரமிளா பாண்டே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.