உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் அனில்குமார். இவர், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மகள் ஊர்வி. டெல்லி உள்நாட்டு விமான நிலையத்தில் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு கணினிப் பொறியாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். டெல்லியில் வசித்துவந்த இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டு ஊர்வியின் மாமியார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது ஊர்விக்கு, பெரும் வேதனையைத் தந்துள்ளது. எனினும் தொடர்ந்து மாமியார் குடும்பத்தினருடன் போராடிவந்த ஊர்வி, ஒருகட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, அவருக்கு சமீபத்தில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
இந்த நிலையில், விவாகரத்து பெற்ற மகளை, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக, கல்யாண தினத்தன்று, மணக்கோலத்துடன் மகளை எப்படி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தாரோ, அதுபோலவே, விவாகரத்து ஆன பிறகும், மகளை மகிழ்ச்சியாக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என முடிவெடுத்த அனில்குமார், வீட்டுக்குத் திரும்பிய தனது மகளை, மேளதாளம் முழங்க வரவேற்றுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அனில்குமார், “சில ஆண்டுகளுக்கு முன்பு என் மகளை, இப்படித்தான் திருமணம் செய்து அனுப்பிவைத்தேன். அதைப்போலவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வரும் அவளை, நாங்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வரவேற்றோம். தற்போது அவள் வலிமையுடனும் கண்ணியத்துடனும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்” என்றார்.
இந்த வரவேற்பில் மனம்குளிர்ந்த ஊர்வி, தன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், ”புதிய வாழ்வைத் தொடங்க சில காலம் ஆகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து ஆகி தன் மகள் வீட்டுக்கு வந்துவிட்டாரே என ஏங்கித் தவிக்கும் சில பெற்றோருக்கு மத்தியில், அவருக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க நினைக்கும் விதமாக, பழைய நினைவுகளை அவர் மறக்கடிக்கும் விதமாக இப்படியொரு வரவேற்பை அளித்திருக்கும் அனில்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.