நவீன் பாபு எக்ஸ் தளம்
இந்தியா

கேரளா|பிரிவுபசாரத்தின்போது ஊழல் குற்றச்சாட்டு! வேதனையில் அதிகாரி துயர முடிவு; மகள்கள் இறுதிச்சடங்கு!

Prakash J

கேரள மாநிலம் கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக பணியாற்றியவர் நவீன் பாபு. இவருடைய பிரிவு உபசார விழாவின்போது, 30 ஆண்டுகாலம் அவருடன் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர், ’’அவர் எவ்வளவு கடின உழைப்பாளி மற்றும் திறமையானவர்’’ என்பதை நினைவுகூர்ந்தனர்.

ஆனால், இந்த நிகழ்வில் யாரும் அழைக்காமலேயே கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவரான பி.பி.திவ்யா (ஆளும் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்) கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நவீன் பாபுமீது திவ்யா ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த நவீன் பாபு, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கண்ணூரில் தாம் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. நவீன் பாபுவை தற்கொலை செய்யத் தூண்டியதாக திவ்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த நிலையில், நவீன் பாபுவின் உடல் மலையாளப்புழாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மாநில அமைச்சர்கள் கே.ராஜன் மற்றும் வீணா ஜார்ஜ் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாபுவின் உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச்சடங்குகளைச் செய்தது அங்குள்ளவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

முன்னதாக, நவீன் பாபு கண்ணூரிலிருந்து தனது சொந்த மாவட்டமான பத்தனம்திட்டாவில் அதே பதவியில் பொறுப்பேற்கவிருந்த நிலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, அவர் பணியாற்றிய கண்ணூரில் பிரிவு உபசார விழா நடைபெற்றுள்ளது. அப்போதுதான் திவ்யா ஊழல் குறித்து குற்றஞ்சாட்டியுள்ளார். செங்கலையில் பெட்ரோல் பம்பிற்கு நவீன் பாபு, அனுமதி வழங்காமல் பல மாதம் காலதாமதம் செய்ததாகவும், அவர் மாற்றப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் அவர்மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதான் அவருக்கு வேதனையைத் தந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

அந்த வேதனையில் இருந்த அவர், நேரே கண்ணூரில் இருந்த வீட்டுக்குப் போய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே அவர் சொந்த மாவட்டத்திற்குப் புறப்பட்டதாக செய்தி வந்த நிலையில், அவரை வரவேற்க செங்கனூர் ரயில் நிலையத்தில் அவரது மனைவி, மகள்கள் காத்து நின்றுள்ளனர். அப்போது அவரைக் காணாததால் அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டனர். அதற்கு பதில் இல்லாத நிலையிலும் இதர நபர்களுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அப்போதுதான் அவர் கண்ணூரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெரிய வந்தது. அரசு ஊழியர் நவீன் பாபுவின் மரணம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மரணத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், திவ்யாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.

Death

பாபுவின் மரணம் தொடர்பாக அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ராஜன், “பாபு மீது ஊழல் புகார்கள் எதுவும் இல்லை. அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதுபோல், பாபுவை ஊழல்வாதியாக சித்தரிக்கும் முயற்சிகளை அவரது குடும்பத்தினரும் நிராகரித்துள்ளனர். மேலும் அவரது மரணத்தில் மர்மமும் சதியும் இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா|ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்ட கணவர் குடும்பம்.. இளம் பெண் மருத்துவர் எடுத்த சோக முடிவு!